நள்ளிரவில் நான் சந்தித்த அந்த மூத்த பொலிஸ் அதிகாரி...!
நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஒரு நாள் சொந்த ஊரை நோக்கி சென்றுக்கொண்டிருந்தேன்(2019). நிறுவனத்தில் அன்று எனக்கு மாலை நேரத்தில் கடமையிருந்தது. தொழிலை முடித்துக்கொண்ட கையோடு, இரவு 11 மணியளவில் எனது வாகனத்தில் ஊருக்கு புறப்பட்டேன்.
கொழும்பில் இருந்து பண்டாரவளை நோக்கிய பயணம் அது, இரவு நேரம், வாகன நெரிசல் இருக்காது. நேர்த்தியான பாதை ஆகையால் சீரான வேகத்தில் என்னுடைய பயணம் தொடர்ந்தது.
எனக்கு மிகவும் பிடித்தமான தெரிவில் இடைக்கால பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்க நானும் சத்தமாக பாடிக்கொண்டே பயணம் நீண்டது.
அதிகாலை 3 மணியிருக்கும், பலாங்கொடை நகரம் தாண்டியதும் நான் பயணித்த திசையில் டோச் லைட் ஒன்று என்னை மறித்தது.
நானும் பாடல் சத்தத்தை குறைத்துவிட்டு, ஓரமாக வாகனத்தை நிறுத்தி ஹேன் பிறேக்கை இழுத்துவிட்டுக்கொண்டே வாகனத்தின் ஆவணங்களை எடுத்துக்கொண்டிருந்தேன்.
"மாத்தயா கோஹேத யன்னே..." என்ற கனத்த குரலுடன் ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி எனது வாகனத்துக்கு அருகில் வந்து, நிதானமாக கேட்டுக்கொண்டே வாகனம் முழுவதும் கண்களால் ஸ்கேன் செய்தார்.
பிறகு அவரின் கேள்விக்கு பதில் வழங்க ஆரம்பித்துக்கொண்டே நான் கீழே இறங்க அவசியம் இல்லை என்றார். இருந்தாலும் நான் இறங்கி அவரிடம் ஆவணங்களை கொடுத்து "நான் கொழும்பில் இருந்து சொந்த ஊருக்கு போகிறேன். பண்டாரவளை என்னுடைய ஊர்" என்று சிங்களத்தில் பதில் அளித்தேன்.
டோச் லைட்டின் வெளிச்சத்தில் ஆவணங்களை சரிபார்த்த அந்த அதிகாரி என்னை பார்த்து என்ன தொழில் செய்கின்றீர்கள் என கேட்டார்.
நானும் ஊடகத்தில் கடமையாற்றுவதாக கூறினேன். அதனை கேட்ட அவர் மேலும் சில கேள்விகளை சரமாரியாக குவித்தார்.
நானும் நிதானமாக பதிலளிக்க, அவர் என்னை சோதனைசாவடிக்குள் அழைத்து சென்று அங்கிருந்த புத்தகத்தில் எனது தரவுகளை குறித்துக்கொண்டார்.
பிறகு, என்னிடம் மிகவும் நட்பு ரீதியாக உரையாட ஆரம்பித்த அந்த பொலிஸ் அதிகாரி பிறகு என்னை மகன் என்று உறவாக பேசுமளவுக்கு இயல்பாக பேசினார். (சிங்கள மக்களிடம் இருக்கும் ஒரு நற்பண்பு இளைஞர்களை மகன் / மகள் என அன்பாக அழைப்பது.)
இதன்போது பெருந்தோட்ட மக்கள் மற்றும் வடக்கு கிழக்கு மக்கள் குறித்து மிகவும் விபரமாக அவர் பேசினார். நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பெரும்பாலும் தான் யாழ்ப்பாணத்திலேயே நீண்டகாலம் கடமையாற்றியதாகவும் அந்த மக்களின் வாழ்க்கை நிலைமைகள் குறித்து தான் நன்கு அறிந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
பின்னர் யாழ்ப்பாணத்து உணவுப்பழக்கம் பற்றி பேசிய அவர், அப்போதுதான் முக்கியமான இடத்தை அடைந்தார்.
தான் உள்நாட்டு உற்பத்திகளாக இருக்கும் மாம்பழம், தோடை, மாதுளை, பலா, கொய்யா ஆகியவற்றையே விரும்பி உண்பதாகவும், வீட்டுக்கு செல்லும் போதெல்லாம் அவற்றையே அதிகம் வாங்கிச்செல்வதாகவும் குறிப்பிட்டார்.
நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் பழங்கள் ஆராக்கியம் அற்றவைகளாக காணப்படுவதயும், அவைகள் விலை அதிகரித்து காணப்படுவதையும் விமர்ச்சித்தார்.
அத்துடன் யாழழ்ப்பாணத்து மாம்பழங்கள் குறித்து தன் விருப்பத்தை நா சுவையை ருசித்துக்கொண்டே அழகாக கூறினார்.
பின்னர் ஒரு அறிவுரையை கூறினார். எமது நாட்டில் விளையும் பழங்களை விற்பனை செய்து அதனை தொழிலாக கொள்ளும் நம்மவரிடம் பழங்களை வாங்கும் போது அதில் இரண்டு நன்மைகள் இருப்பதை அர்த்தமாக எடுத்து கூறினார். அதாவது அந்த பழங்களின் சுவை மற்றும் ஆரோக்கியம் உறுதியானது என்பதுடன், எமது ஊர் வியாபாரிகள் உற்பத்தியாளர்களுக்கே நாம் பணம் கொடுக்கின்றோம். ஆகவே அவர்களும் நன்மை அடைய எமது நாட்டு உற்பத்திகளும் அதிகரிக்கின்றது என்பதை கூறினார்.
இவ்வாறு ஒரு அரைமணிநேரம் எங்களின் உரையாடல் நீண்டது. இதிலே இடைக்கிடையே தனது முதுமையின் விரக்தியையும், இரவில் தனித்து காவல் இருப்பதில் இருக்கும் சவாலையும் அழுத்தமாக பதிவிட அவர் மறக்கவில்லை.
அவரிடம் உரையாடியபோது எனக்கு கிடைத்த அந்த ஊர்ப்பற்றை இறுக்கிப் பிடித்துக்கொண்டே நானும் அங்கிருந்து புறப்பட எத்தனித்தேன்.
மீண்டும் அவர் மகன் கவனமாக வாகனத்தை செலுத்துங்கள், இரவு நேரம் அவதானம் தேவை எனக்கூறி பொலிஸ் பாணியில் சிரித்துக்கொண்டே வழியனுப்பினார்.
அவருடன் பேசக்கிடைத்த அந்த அரைமணி நேரத்தை சிந்தனையில் ஆராய்ந்துகொண்டே பயணத்தை தொடர்ந்தேன்.
(பொலிஸ் அதிகாரிக்கு 50 க்கும் மேற்பட்டு வயது இருக்கும். அவரின் பெயரை நான் இங்கு குறிப்பிடவில்லை.)
பொலிஸாரின் வாழ்க்கை மிகக் கடினமானது. அதுவே அவர்களை கடுமையானவர்களாகவும் ஆக்கி விடுகிறது. அவர்கள் தங்கள் மனித நேயத்தையும் மறைத்து வைத்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகிறது. அவர்களும் மனிதர்கள் தான். அதேவேளை உள்நாட்டு உற்பத்திகளுக்கு நாம் வழங்கும் சிறு ஆதரவு பெரும் மாற்றத்தை உண்டு பண்ணும். அதை நாம் உணர வேண்டும். அது மட்டுமல்ல நமது பொறுப்பற்ற செயல்களினாலும் பாதிக்கப்படுபவர்களாக பொலிஸார் உள்ளமை கவலையே.
ReplyDeleteஉங்களின் கருத்து வரவேற்க தக்கது.
Delete