இரவில் நடுவழியில் நானும் தோழியும் கண்ட அந்த சம்பவம்..
மனிதாபிமானம் மிக்க மனிதர்களே நம் வாழ்க்கையை அழகாக்குகின்றனர். அந்த வகையில் ஒரு பொலிஸ்காரர் குறித்த எனது அனுபவங்களை கடந்த பதிவில் பகிர்ந்திருந்தேன்.
அதே போல் இதுவும் வழியில் சந்தித்த ஒரு சிறந்த மனிதர் பற்றிய மனிதாபிமானம் நிறைந்த நினைவுகளாகும்.
2019 ஆம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றது. திகதி சரியாக நினைவில்லை.
அன்று என் சொந்த ஊரான பண்டாரவளைக்கு சென்று வர திட்டமிட்டு பயணித்தோம். அந்த பயணத்தில் நான், என்னுடைய நண்பன் ஹசித, மற்றும் என் உயிர்த் தோழி ஆகிய மூவரும் ஒன்றாக பயணித்தோம்.
எங்கள் பயணம் 12 மணியளவில் கொழும்பில் ஆரம்பித்தது. நானும் எனது நண்பனும் மாறிமாறி வாகனத்தை செலுத்தினோம்.
ஹசிதவின் ஊர் ஓப்பநாயக்க எனப்படும் பிரதேசம், இது பலாங்கொடைக்கு சில கிலோமீட்டர்கள் முன்னால் அமைந்துள்ளது.
அங்கு சென்று நண்பனை வீட்டில் விட்டுவிட்டு பயணத்தை தொடர்வதே திட்டமாக இருந்தது.
ஆனால் வீட்டிற்கு சென்றதும் அவன் தனது வேலையை காட்டிவிட்டான். அது வேறொன்றும் இல்லை, இரண்டு பேருக்கு கிட்டதட்ட எட்டுபேர் சாப்பிடும் அளவுக்கு உணவு.
அப்படி ஒரு உபசரிப்பு. நண்பனின் மனைவி, அம்மா, அப்பா, குட்டி பிள்ளைகள் என அனைவரும் எங்களை விடுவிக்க மறுத்துவிட்டனர்.
நண்பனின் வீட்டு சூழலும் அவர்களின் உபசரிப்பும் எங்களை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கியது. இருந்தும் அம்மா எனக்காக காத்திருப்பார் எனக்கூறியதற்கு செவிசாய்த்த ஹசிதவின் பெற்றோர் அரைமனதுடன் எங்களை அனுப்பிவைத்தனர்.
அப்போது நேரம் சுமார் இரவு 7 மணியிருக்கும். ஹசிதவின் வீட்டில் இருந்து ஒரு 3 கிலோமீட்டர்கள் தூரம் பயணித்து பிரதான பாதையை அடைந்த பின்னர், மீண்டும் எங்கள் பயணத்தில் வேகம் சீராகப் படர ஆரம்பித்தது.
இந்த பிரதான மார்க்கத்தில் சில தடவைகள் வாகனம் செலுத்திய அனுபவம் எனக்கு உள்ளது. அத்துடன் இரவு நேரம் என்பதால் வாகனத்தின் மின்விளக்கு ஒளி வழியில் என் விழிகள் தொற்றிக்கொள்ள, வீட்டிற்கு செல்லும் ஆர்வத்தில் பயணம் நீண்டது.
இங்குதான் சம்பவமே. ஏதோ எனது வேகத்தில் இறுக்கம் தெரிய, நானும் என்ன என்பதை உணர முயற்சிக்க, கண்கள் ஏதேனும் கராஜ் இருக்கின்றதா என்று தேடியது.
வாகனத்தின் உந்துதல் 80 வீதம் சிக்கலாகிவிட்டது. உடனே நான் இறங்கி அனைத்து டயர்களையும் பரிசீலித்தேன்.
அப்போது ஒரு சில்லு அதன் நிலையில் இருந்து விலகி இறுக்கமாக இருந்தது. நானும் காற்று போயிறுக்கும் என நினைத்து மாற்ற முயன்ற போது முடியவில்லை.
இதற்கிடையே என் தோழி வண்டியில் இருந்து இறங்கி எனக்கு உதவினாள். அவளின் உதவியில் வாகனத்தை ஒரு ஓரமாக தள்ளி நிறுத்தி, வாகனத்தின் பார்க்கிங் லைட்டை ஒளிரவிட்டு தலையில் கைவைத்து சுற்று முற்றும் பார்தேன். ஒரே இருட்டு.
எனக்குள் இருந்த பயத்தை ஒட்டுவதற்குள், என் தோழி என்ன செய்வது என்று கேட்டவாறே அருகில் வர, அந்த குளிரிலும் விட்டுவிட்டு எரியும் விளக்கு வெளிச்சத்தில் அவள் பயம் நன்றாக புரிந்தது.
இனி எங்கே, என்னுடைய கவனம் இரண்டானது. வாகனத்தையும் சரிபார்க்க வேண்டும், அவளையும் ஆறுதல் படுத்த வேண்டும்.
இவ்வாறு சில நிமிடங்கள் நான் தடுமாறிக்கொண்டிருக்கும் போதே, அந்த இடத்திற்கு ஒரு வயதான ஐயா ஒருவர் வந்து என்னிடம் நடந்ததை வினவினார்.
நானும் அவரை முழுமையாக கவனித்துக்கொண்டே நடந்ததை கூறினேன். அதனைக்கேட்ட அவர் அங்கிருந்த ஒருவரிடம் வாகனத்தை பழுதுபாக்க ஆலோசனை கேட்டார். இதற்கிடையே மற்றுமொரு நபரும் அங்கே வர, என்னை சற்று இருக்குமாறும் தான் திரும்பி வருவதாகவும் கூறி மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுவிட்டார்.
பின்னர் அங்கு என்னோடு பேசிக்கொண்டிருந்த அந்த ஐயா, தான் கையில் வைத்திருந்த டோர்ச் லைட்டை என்னிடம் கொடுத்துவிட்டு மெதுவாக சென்றுவிட்டார்.
நான் சுற்றியும் பார்த்துவிட்டு அடுத்த முயற்சிக்கு தயாரானேன். சிலவேளை சென்றவர் வரவில்லை என்றால் நேரம் சென்றுவிடும். பின்னர் என்னுடன் இருக்கும் தோழியை எப்படி அழைத்து செல்வது? இந்த குழப்பத்தில் நான் தடுமாறும் நேரம், எங்களை நோக்கி ஒரு வாகனத்தின் வெளிச்சம் நெருங்கியது. சில வினாடிகளில் என் மூக்குக் கண்ணாடியை சரிசெய்து, அது ஒரு கார் என்பதை உறுதி செய்துகொண்டேன்.
இப்போது என்னுடைய கைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டு என் தோழி எனக்கு பின்னே மறைந்துகொண்டு தன் பயத்தை என்னிடம் கூறினாள். நானும் வாகனத்தின் சில்லுகளை கழற்ற பயன்படுத்தும் இரும்பு திருகியை நன்றாக பற்றிப் பிடித்துக்கொண்டு காரை உற்றுக் கவனித்தேன்.
என் மனம் உருகிப் போனது. எங்களிடம் பேசிக்கொண்டிருந்த அந்த ஐயா வெளிச்சம் போதிய அளவு தேவை என்பதற்காகவும், என்னுடைய தோழி அமர்ந்திருக்க வேண்டும் என்பதற்காகவும் அவருடைய காரை அங்கே கொண்டு வந்ததாக கூறினார்.
என்னால் ஒருபக்கம் பேசவும் முடியவில்லை, மறுபுறம் நன்றி தெரிவிக்கவும் வாய் உளரியது.
பின்னர் என்னுடன் வந்து நின்றுகொண்டு, பயப்பட வேண்டாம் என்றும், எல்லாம் சரியாகும் வரை தான் இருப்பதாகவும் கூறி என்னைப்பற்றி வினவினார்.
நானும் என்னைப்பற்றி, என் குடும்பத்தை பற்றி கூறியதும் அவர் மேலும் ஒருபடி சென்று தனது வீட்டில் அந்த இரவில் பாதுகாப்பாக தங்கும்படியும், காலையில் வாகனத்தை சரிபார்த்துக் கொண்டு பயணிக்குமாறும் கூறினார்.
பின்னர் தான் சிங்கள இனத்தவர் என்றும் அதற்காக மனித நேயம் அற்று செயற்பட முடியாது எனவும் கூறினார். யாராக இருந்தாலும் மனிதர்களே, அனைவரும் உதவிக்கொண்டு வாழ்வதே வாழ்க்கை என்றார்.
அத்துடன் தான் முற்போக்கு சிந்தனை உடைய அரசியல் செயற்பாட்டாளர் எனவும், அதற்காக தமிழர்களை தண்டிக்கும் மனப்பான்மை அற்றவர் எனவும் என்னிடம் கூறினார். இவற்றோடு தனது குடும்ப விபரங்களையும், பிள்ளைகளின் கல்வித் தரத்தையும் ஒரு தந்தையாக பெருமைப்பட என்னிடம் கூறினார்.
இவ்வாறு நாங்கள் பேசிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், அதே வேகத்தில் மோட்டார் சைக்கிள் எங்கள் அருகில் சராஸ் என்று வந்து நின்றது. பழுதுபார்க்கும் ஒரு அண்ணணும், முதலில் வருவதாக கூறிச்சென்ற அந்த நபரும் சைக்கிளை விட்டு இறங்கினர்.
அப்போது நான் அந்த ஐயாவுக்கு நன்றி கூறி புறப்பட்ட போது, எனது தொலைபேசி இலக்கத்தை பெற்றுக்கொண்டார். எதுவானாலும் தனக்கு அழைப்பை ஏற்படுத்துமாறு கூறி நம்பிக்கை தந்தார். நான் அவரை கும்பிட்டு வணக்கம் சொல்ல என்னை கட்டியணைத்து தட்டிக்கொடுத்து வழியனுப்பினார்...
இப்படிப்பட்ட மனிதர்களும் இந்த பிரபஞ்சத்தில் இருக்கின்றனர்.
அடுத்தது, அன்று வாகனம் பழுது பார்த்த அண்ணா ஒரு சிறப்புக்குரிய மனிதன். அவர் என்னுடைய வாகனத்தை சரிபார்த்த நேரத்தில் இடம்பெற்ற மனது மறக்காத விடயங்களையும், மனித நேயமிக்க சில விடயங்களையும் தனியான பதிவில் கூறுகின்றேன்...
நன்றி...
சிறப்புக்குரிய மனிதருக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்...
ReplyDelete